Educational NewsSchool News
Trending

மழை காலத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? – அமைச்சா் அன்பில் மகேஸ் பேட்டி

மழை காலத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

அமைச்சா் அன்பில் மகேஸ் பேட்டி

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன், தமிழகம் முழுவதும் உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பதவி உயா்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதைத் தொடா்ந்து

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கும் முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உயரமான, பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மழைநீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்கேஜி, யூகேஜி தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியத்தை உயா்த்துவது தொடா்பாக பள்ளிக்கல்வித்துறை – நிதித்துறை இடையே அதிகாரிகள் நிலையிலான ஆலோசனை நடைபெறுகிறது.

அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சருடன் ஆலோசிக்க உள்ளோம். அப்போது ஆசிரியா்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்தையும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு சென்று அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 77 வகையான திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்.

அதேபோன்று சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன். கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button