கட்டுரை

சாலை பாதுகாப்பு – கட்டுரை 

சாலை பாதுகாப்பு - கட்டுரை 

சாலை பாதுகாப்பு – கட்டுரை

சாலை பாதுகாப்பு - கட்டுரை 
சாலை பாதுகாப்பு – கட்டுரை

குறிப்புச்சட்டம்:

முன்னுரை
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
சாலை விதிகள்
இதர பாதுகாப்பு குறிப்புகள்
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
முடிவுரை.

முன்னுரை:
மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் சாலையும் ஒன்று. இன்றைய உலகத்தில் போக்குவரத்தானது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. சாலைகள் தூரத்தைக் குறைக்கின்றன ஆனால் அதே வேளையில் சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கான மக்கள் காயமடைவதுடன் அதிக உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பு என்பது முதன்மையாக சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் முதன்மையாகக் குறிக்கிறது.சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இதையும் படிங்க

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்:
ஒவ்வொரு நாளும், சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அடிக்கடி நிகழும் அசம்பாவிதங்கள் பற்றி தினமும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்கள் படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழிவகுக்கும் வருந்தத்தக்க நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன. பிரச்சனை சாலைகளால் அல்ல. அது நம் கவனக்குறைவால் தான். அதனால் தான் தான் இதுபோன்ற விபரீதம் ஏற்படுகின்றது. உயிரிழப்பால் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனைக்குக் காரணம் மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களைக் கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்து ஆகும்.

சாலை விதிகள்:
சாலையில் விபத்துகள் நேரிடா வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்துக் காவல்துறை பணிசெய்கின்றனர். மேலும் பல இடங்களில் வண்ண விளக்குகள் மூலமாக சாலை போக்குவரத்தை நெறிப்படுத்தப்படுகிறது.

சிவப்பு வண்ண விளக்கு ‘நில்’ என்ற கட்டளையையும் மஞ்சள் வண்ண விளக்கு ‘தயாராக இரு’ என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு ‘புறப்படு’ என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. இடது பக்கம் செல்லவேண்டும் என்பது சாலை விதிகளில் முக்கியமானதாகும். பாதசாரிகள் நடப்பதற்கான நடைமேடையில் செல்ல வேண்டும். எதிர்த்திசையில் சாலைகளைக் கடக்கும்போது அதற்கென கோடு போட்டிருக்கும் இடத்தில்தான் கடக்க வேண்டும். போக்குவரத்துக் காவல்துறையினரின் கட்டளையை மீறி நாம் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக் கூடாது. வாகனம் ஓட்டுபவர்களுக்கென கூறப்பட்டுள்ள சாலைவிதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக்கூடாது.

இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக்கூடாது. பேருந்துகளில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் நிற்கக் கூடாது. வண்டி ஓட்டுபவர்கள் உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது, கண்டிப்பாக வண்டி ஓட்டக்கூடாது. மதுவருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். எந்தவொரு வண்டியையும் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லக்கூடாது. பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலியளவில் ஒலிப்பானை ஒலிக்கக்கூடாது.

போக்குவரத்துக் குறியீடுகள்:
போக்குவரத்துக் குறியீடுகள் போக்குவரத்தினை முறைப்படுத்தவும் ஆபத்துக்களை எச்சரிக்கை செய்யவும் வழிகாட்டுவதற்கும் சாலையை உபயோகிப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி புரிந்து கொள்வதும் அதைப்பற்றிய முறையான அறிவும் அவசியம். ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. போக்குவரத்துக் குறியீடுகள் வாகனத்தில் உள்ள ஓட்டுநர், பயணிகளுக்குச் சாலையில் ஏற்படும் விரும்பத்தகாத ஆபத்துக்களைத் தடுக்கின்றது.

இதர பாதுகாப்பு குறிப்புகள்:
மது அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டுதல் கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது ஒருபோதும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. அதிக சத்தம் நிறைந்த இசையினைக் கேட்பதைத் தவிர்க்கவும், சாலையில் பாதை தடத்தை மாற்றுவதற்கு முன்பு கண்ணாடி வழியே பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மகிழுந்து ஓட்டும்பொழுது எப்பொழுதும் இருக்கைப்பட்டை அணியவேண்டும். வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பாதசாரிகளையும் பிற ஓட்டுனர்களையும் திட்டுதல் அல்லது சத்தமிடுதல் கூடாது. பாதசாரிகள் கடக்கும் பாதையில் (வரிக்கோடு) மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். போக்குவரத்துச் சமிக்ஞைகளில் செலவிடும் இரண்டு நிமிட நேரம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புள்ளதாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு ஒளிரும் போது சாலையைக் கடக்கக்கூடாது. சாலையின் நடுவில் நடப்பதைத் தவிர்த்துச் சாலையின் ஓரத்தில் நடக்கவும்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:
சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

முடிவுரை:
சாலை பாதுகாப்பு என்பது சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் குறிக்கிறது.

சாலை விபத்துக்கள் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஆகும். உயிர் இழப்பினாலும் படுகாயத்தினாலும் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும்.சாலை விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்கக் கூடியவை ஆகும். எனவே ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சீக்கிரமாக புறப்படு! மெதுவாக செல்!!பாதுகாப்பாக சேர்ந்திடு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button